வியாழன், 26 நவம்பர், 2015

வினை நீங்கு பதிகம்

கொழும்புத்துறை கிழக்கில் கோவில் கொண்டருளும் அருள் மிகு முத்துமாரியம்மன் மீது பாடப்பட்ட
                

              வினை நீங்கு பதிகம் 

1
சீர்மெவு கொழும்புத்துறை கிழக்கில் மேவி
     அருள்பொழியும் அன்னை  முத்துமாரி
கார் இறங்கும் கடற்கரையில் பக்தர்பாட
    வந்தணைந்தோர் வினைதீர்க்கும் தெய்வம்
தார் இலங்கும் பொன்மேனி தவமுடையாள்
            அருள் சீலிதன்னை தமிழில் பாட
பார் போற்றும் பாரதத்தை மலையில்கீறும்
   கணபதியே என்றும் காப்பதாமே.

     ------------------------------------------

2

பஞ்சம் நோய் பயம் பகை
      தீய ஆவியெல்லாம் உனைத்
தஞ்சமென அணைந்தார்கில்லை
  கலைஏழும் அருள் கருணைக்கடலே
கஞ்ச மலர்ப்பாதம் தொழுதோம்
      பக்தர் அருந்தும் பசிய இலைமருந்தே
நெஞ்சம் குழைத்தாய் நீள் கடற்கரை சூழ்
        கொழும்புத்துறையமைந்த  தாயே.

3

நாளும் பொழுதும் நின் பணிசெய்துன்
   வாசலிலே வாழும் அடியவர்கள்
சூழும் வினை மாற்றியருள் சுந்தரியே
    காலநிலை  மாற்றும் கதிபடர்
கோளும் வணங்கும் குணசீலி
   குளிர்வளர் ஆல நிழலிருந்தாய் நாம்
வாழும் வகைக்கே வந்தாய் வளரும்
   அருளாய் நின்றாய்  எம் வாசலிலே


4

பார்த்தன கண்கள் உன்அருளில்
     மனமுருகி அம்மாவென நினைந்து
 வேர்த்தது  நெஞ்சம் விழிமலர்த்தாமரை
       கொண்டு கடைக்கண்பாராய்
ஆர்த்தன கடல் அலை எழுகாற்றின்
        ஓசை  உன்தன் தோத்திரமோ
வார்த்த வடிவுடை சிலையழகி குளிர்
      முத்துமாரி எங்கள் வழித்துணையே.

5

துணையே நின் திருப்பாதங்கள்
     உலகாளும் பரமன் மகிழ்
இணையே பக்தர் தினம் ஏத்தும்
   கொழும்புத்துறை கிழக்கமர்ந்தாய்
பணையும் யாழும்  வழங்கும் பழம்
        தமிழ் இசைபரவும் பைரவியே
அணையும் பக்தர் குறைதீர்த்து
     அழியாப்பதம் தரும் அருள் சாகரமே.





6
திங்களணிந்தவன்  செய்பாகத்தவளே
   அமரர் வணங்கும் அம்பிகை
சங்கம் ஆர்க்கின்ற கொழும்புத்துறை
     நகர் கோவில் அணைந்தாய்
தங்கும் எழில் தனித்தேவி தாரணி
    தொழும் அடியார் மனதின்
மங்கா ஒளியே  மலர் அயன்
 போற்றும்  மாணிக்க நாயகியே

7
ஆடியும் பாடியும் அனல் தலைஏந்தி
     நின் அடி தொழுதழுவார்
கூடியும் கும்பிட்டும் உனதருள்
     பெறவந்து  வந்திப்பார்  அமரர்
தேடியும் காணாத சிவன் துணையே
    அருள் சிந்தும் ஒளி அழகே
வாடியும் தவித்தும் அலையும் மனிதர்
     மனக்கவலை  தீர்ப்பாய் கற்பகமே.

8

வெப்பநோய் அம்மை சுரம் தவிர்க்கும்
      குளிர் கண்ணகியே  நன்னீர்த்தீர்த்தம்
தப்பாது  நீராட துயர்கழுவும் அருளன்னை
       நின் அருகணைந்து வணங்கி
எப்போதும் துதிக்கும் அடியவர்கள்
   உள்ளுறையும் ஒளிர்நிலவே
தெப்பங்கள் நீந்தும் கடலின் கரை
 அமர்ந்தாய் முத்துமாரியன்னையே

 9
உன் புகழ்  கேட்டு மனம் கரைந்து
             நின் அழகிலுாறி அருள்சுரந்து
மின் இடையாய் நின் விழிவாசல் வந்து
       விழுந்து  அருளள்ளி களித்து
பொன் வண்ண மலரடிகள் சேவித்து
    உன்னை பாட மாட்டேனா
தென்னம்பெருந்துறையான்  பாகத்தவளே
      ஏழ் உலகும்  காத்தவளே.

10
தாயே நின் பாதம் சரணென்று வந்து
    பாதமலர்பணிவார் வினைதீர்ப்பாய்
நீயே முழுதுலகம்  முற்றும் உணர்ந்தபொருள்
   கற்றோர்  சொல்லாகி ஒளிரும் இமவான்
சேயே  உலகிலுறை  மாந்தர் உளமுருக்கும்
     ஞானக்கனியே  அருள்  முத்துமாரி
தாயே  இப்பாடல் பத்தும் பாடுவார் பாவ
  வினை அகல நின் பாத அருள் தா----

------------------------------கவிஞர்வேலணையூர்-தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக