வியாழன், 26 நவம்பர், 2015

கவிதை இன்னமும் காலை சாப்பிடவேயில்லை...

கவிதை கட்டுக்களை அறுத்தது
யன்னல் கண்ணாடியை உடைத்து
வெளியே பாய்ந்தது.
வீதியில் நடந்தது கவிதை

பலா் புதிதாய் அறிமுகமானார்கள்
கை குலுக்கினார்கள்
புதிய காற்று புதிய உலகம்
சிறகு விரித்தது கவிதை
சிலா் வரவேற்றார்கள்
பலா் கொண்டாடினார்கள்
ஒரு சிலா் வடிவத்தை மாற்றினார்கள்

சிலா் கவிதையை பிடித்து
முறித்து அடுக்கினார்கள்

இப்போது கண்ணாடியில் பார்
அழகாய் இருக்கின்றாய் என்றார்கள்
இம் திருப்திப்பட்டது கவிதை

சிலா் கவிதையிள் அடியில்
தம் பெயரைப் போட்டு
உரிமை கொண்டாடினார்கள்

யாருக்கும் விளங்காதிரு அது தான்
உனக்கு மரியாதை என்றார்கள்.

கவிதை வீதிக்கு வந்ததால்
எல்லோரும் பழகிப்பார்க்க விரும்பினார்கள்
கவிதை எல்லோருடனும் நடந்தது.
 தன் புகழ் பரப்பவும்
பிறரை துாற்றவும்
கவிதையை ஏவி விட்டார்கள்

இறுதியாய் கவிதையை
சிலா் விற்கவும் துணிந்தார்கள்

ஒருவன் சொன்னான்
உன்னை நான் தானே  திருமணம்செய்ய போகிறேன்
அதற்புபின் நான் மட்டுமே
உன்னை எழுதுவேன் என்றான்

யோசிக்க யோசிக்க கவிதைக்கு
தலை சுற்றியது 

பாவம் கவிதை இன்னமும்
காலை சாப்பிடவேயில்லை...

-----------------வேலணையூர்-தாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக