திங்கள், 7 டிசம்பர், 2015

உன் கனவுகள் கொன்றவர் வாழிய நீடி.

காற்றினை உன் விழி அழாவும்
அந்த கடலுக்கும் ஒரு முறை வேர்க்கும்
ஆற்றொணாய் அழுகையாய் விம்மும்
அந்த பயங்கரம் கண்களில் விரியும்
 
 
கடும் இருள் விரவிய இரவில்
உன் கணவனை இழுத்தவர் சென்றார்
கதறிய உன் குரல் தேய்ந்து காற்றினில் அழிந்தது
உன் வாழ்க்கையும் கூட.
 
அலை தொடும் கரையினில் நிற்பாய்
நினைவுகள் கொன்றிட
நிழலெல்லாம் எரிவாய்
 
ஏங்கியே இழைத்தத தேகம்
உன்னை தெருவினில் எறிந்தது காலம்
உன் துயர் அகலுமோ தோழி
உன் கனவுகள் கொன்றவர் வாழிய நீடி.
 
 
உன் கூந்தல் கலைக்கிற காற்று 
கர்வப்படுகிறது.

முக அழகை பூசிப்பார்க்கிறது நிலவு.


விழிகளை விருந்துக்கு அழைக்கிற நடசத்திரங்கள்

மின்னுவதை மறக்கிறது.

மாலை உன் நாணத்தில் சிவக்கிறது


நீ நடந்து வருகிறாய்---------


பூமி நனைக்கும் பனித்துளிக்கும் வியர்க்கிறது.


உன் கண்களில்

மிதக்கிற காதலை ஏந்தி கொள்கிற தென்றல்

அதை பூக்களின் மீது இறக்கி வைக்கிறது

புதிய கவிதை எழுதுகிறது இயற்கை.


புன்னகை செய்கிறாய் 

நான் காணாமல் போகிறே்ன்....



                         -வேலணையூர்-தாஸ்

வியாழன், 26 நவம்பர், 2015

வினை நீங்கு பதிகம்

கொழும்புத்துறை கிழக்கில் கோவில் கொண்டருளும் அருள் மிகு முத்துமாரியம்மன் மீது பாடப்பட்ட
                

              வினை நீங்கு பதிகம் 

1
சீர்மெவு கொழும்புத்துறை கிழக்கில் மேவி
     அருள்பொழியும் அன்னை  முத்துமாரி
கார் இறங்கும் கடற்கரையில் பக்தர்பாட
    வந்தணைந்தோர் வினைதீர்க்கும் தெய்வம்
தார் இலங்கும் பொன்மேனி தவமுடையாள்
            அருள் சீலிதன்னை தமிழில் பாட
பார் போற்றும் பாரதத்தை மலையில்கீறும்
   கணபதியே என்றும் காப்பதாமே.

     ------------------------------------------

2

பஞ்சம் நோய் பயம் பகை
      தீய ஆவியெல்லாம் உனைத்
தஞ்சமென அணைந்தார்கில்லை
  கலைஏழும் அருள் கருணைக்கடலே
கஞ்ச மலர்ப்பாதம் தொழுதோம்
      பக்தர் அருந்தும் பசிய இலைமருந்தே
நெஞ்சம் குழைத்தாய் நீள் கடற்கரை சூழ்
        கொழும்புத்துறையமைந்த  தாயே.

3

நாளும் பொழுதும் நின் பணிசெய்துன்
   வாசலிலே வாழும் அடியவர்கள்
சூழும் வினை மாற்றியருள் சுந்தரியே
    காலநிலை  மாற்றும் கதிபடர்
கோளும் வணங்கும் குணசீலி
   குளிர்வளர் ஆல நிழலிருந்தாய் நாம்
வாழும் வகைக்கே வந்தாய் வளரும்
   அருளாய் நின்றாய்  எம் வாசலிலே


4

பார்த்தன கண்கள் உன்அருளில்
     மனமுருகி அம்மாவென நினைந்து
 வேர்த்தது  நெஞ்சம் விழிமலர்த்தாமரை
       கொண்டு கடைக்கண்பாராய்
ஆர்த்தன கடல் அலை எழுகாற்றின்
        ஓசை  உன்தன் தோத்திரமோ
வார்த்த வடிவுடை சிலையழகி குளிர்
      முத்துமாரி எங்கள் வழித்துணையே.

5

துணையே நின் திருப்பாதங்கள்
     உலகாளும் பரமன் மகிழ்
இணையே பக்தர் தினம் ஏத்தும்
   கொழும்புத்துறை கிழக்கமர்ந்தாய்
பணையும் யாழும்  வழங்கும் பழம்
        தமிழ் இசைபரவும் பைரவியே
அணையும் பக்தர் குறைதீர்த்து
     அழியாப்பதம் தரும் அருள் சாகரமே.





6
திங்களணிந்தவன்  செய்பாகத்தவளே
   அமரர் வணங்கும் அம்பிகை
சங்கம் ஆர்க்கின்ற கொழும்புத்துறை
     நகர் கோவில் அணைந்தாய்
தங்கும் எழில் தனித்தேவி தாரணி
    தொழும் அடியார் மனதின்
மங்கா ஒளியே  மலர் அயன்
 போற்றும்  மாணிக்க நாயகியே

7
ஆடியும் பாடியும் அனல் தலைஏந்தி
     நின் அடி தொழுதழுவார்
கூடியும் கும்பிட்டும் உனதருள்
     பெறவந்து  வந்திப்பார்  அமரர்
தேடியும் காணாத சிவன் துணையே
    அருள் சிந்தும் ஒளி அழகே
வாடியும் தவித்தும் அலையும் மனிதர்
     மனக்கவலை  தீர்ப்பாய் கற்பகமே.

8

வெப்பநோய் அம்மை சுரம் தவிர்க்கும்
      குளிர் கண்ணகியே  நன்னீர்த்தீர்த்தம்
தப்பாது  நீராட துயர்கழுவும் அருளன்னை
       நின் அருகணைந்து வணங்கி
எப்போதும் துதிக்கும் அடியவர்கள்
   உள்ளுறையும் ஒளிர்நிலவே
தெப்பங்கள் நீந்தும் கடலின் கரை
 அமர்ந்தாய் முத்துமாரியன்னையே

 9
உன் புகழ்  கேட்டு மனம் கரைந்து
             நின் அழகிலுாறி அருள்சுரந்து
மின் இடையாய் நின் விழிவாசல் வந்து
       விழுந்து  அருளள்ளி களித்து
பொன் வண்ண மலரடிகள் சேவித்து
    உன்னை பாட மாட்டேனா
தென்னம்பெருந்துறையான்  பாகத்தவளே
      ஏழ் உலகும்  காத்தவளே.

10
தாயே நின் பாதம் சரணென்று வந்து
    பாதமலர்பணிவார் வினைதீர்ப்பாய்
நீயே முழுதுலகம்  முற்றும் உணர்ந்தபொருள்
   கற்றோர்  சொல்லாகி ஒளிரும் இமவான்
சேயே  உலகிலுறை  மாந்தர் உளமுருக்கும்
     ஞானக்கனியே  அருள்  முத்துமாரி
தாயே  இப்பாடல் பத்தும் பாடுவார் பாவ
  வினை அகல நின் பாத அருள் தா----

------------------------------கவிஞர்வேலணையூர்-தாஸ்

வராய் தைப்பாவாய்!

விடிகாலைப்புள் அகவும்
பண் சுமந்த பாடல் காற்றேறும்
 மண்மலரும் பனி தாங்கி மலராடும் .
கண்விழிக்கும் பொழுது இது
கதிரும் எழுந்துவரும் பெண்ணவளே
விடிகாலைப்பேரழகே
வாராய் தைப்பாவாய்!

காலை எழுந்தோம் கதிர் தொழுதோம்
எண்ணமெல்லாம் இறை நிறைந்தோம்
வண்ணம் பல உடுத்தோம் வரவேற்றோம்
பண்ணிசைகள் பாடிப்பணிந்தோம்.
தண் மகளே தமிழ் அணங்கே
கண்ணிறைந்து வாராய் தைப்பாவாய்!

பொங்கு தமிழ் என்றே புறப்பட்டோம்
கண்பட்டு போதனதுவோ பின் நாளில் புண்பட்டோம்
ஆனாலும் இனம் பட்டுப் போகவில்லை
மீள முயல்வோம் தமிழ் ஆளும் வகை செய்வோம்.
வாழி என வாழ்த்தி எம் வாசல் வாராய் தைப்பாவாய்!

கிழக்கில் ஒளி எழுந்தது காண்
ஏர் உழவர் புத்தரிசி கொண்டு பொங்கலிட்டார்
ஆடலுடன் பாடல் பாடி அகமகிழ்ந்தார்.
 உறவுகளை் நாடி குதுாகலித்தார்.
தேடி நாம் நின்ற திருவே தேன் தழிழணங்கே
ஆடியே வராய் தைப்பாவாய்!

ஆடல் திறனுடை ஆடவர்கள்
 வேட்டியுடுத்தி வெளிக்கிட்டார்
வெடிகொழுத்தி மகிழ்ந்தார்
 போட்டிகள் வைத்தார்
அதில் வீரம் காட்டியே வென்றார்
மாலையில் பாட்டிகள் வைத்தார்
மனதினில் கன்னி நினைவு கூட்டியே களித்தார்
அவர் திறனை கூட்டவே வாராய் குளிராய் தைப்பாவாவாய்!

மென்கை பொன்முக மங்கையர்கள்
 கார்குழல் முடித்து மலர்சூடி
கைவளை திருத்தி கலன்கூட்டி
 கூர்விழிக்கரையில் மையெழுதி
கண்களில் காதலர் நினைவெழுதி
தமிழ் பண்களால் உன்னையே போற்றி வந்தார்
. சிறு நங்கையர் அவர் தன்னை வாழ்த்தி
ஆசி நல்கியே வருவாய் தைப்பாவாய்.!

கவிதை இன்னமும் காலை சாப்பிடவேயில்லை...

கவிதை கட்டுக்களை அறுத்தது
யன்னல் கண்ணாடியை உடைத்து
வெளியே பாய்ந்தது.
வீதியில் நடந்தது கவிதை

பலா் புதிதாய் அறிமுகமானார்கள்
கை குலுக்கினார்கள்
புதிய காற்று புதிய உலகம்
சிறகு விரித்தது கவிதை
சிலா் வரவேற்றார்கள்
பலா் கொண்டாடினார்கள்
ஒரு சிலா் வடிவத்தை மாற்றினார்கள்

சிலா் கவிதையை பிடித்து
முறித்து அடுக்கினார்கள்

இப்போது கண்ணாடியில் பார்
அழகாய் இருக்கின்றாய் என்றார்கள்
இம் திருப்திப்பட்டது கவிதை

சிலா் கவிதையிள் அடியில்
தம் பெயரைப் போட்டு
உரிமை கொண்டாடினார்கள்

யாருக்கும் விளங்காதிரு அது தான்
உனக்கு மரியாதை என்றார்கள்.

கவிதை வீதிக்கு வந்ததால்
எல்லோரும் பழகிப்பார்க்க விரும்பினார்கள்
கவிதை எல்லோருடனும் நடந்தது.
 தன் புகழ் பரப்பவும்
பிறரை துாற்றவும்
கவிதையை ஏவி விட்டார்கள்

இறுதியாய் கவிதையை
சிலா் விற்கவும் துணிந்தார்கள்

ஒருவன் சொன்னான்
உன்னை நான் தானே  திருமணம்செய்ய போகிறேன்
அதற்புபின் நான் மட்டுமே
உன்னை எழுதுவேன் என்றான்

யோசிக்க யோசிக்க கவிதைக்கு
தலை சுற்றியது 

பாவம் கவிதை இன்னமும்
காலை சாப்பிடவேயில்லை...

-----------------வேலணையூர்-தாஸ்



சனி, 10 மே, 2014

கொல்கின்ற கனவுகள்

வானம் வைரமாய்
சொரிகிறது நட்சத்திரங்களை .

மேகம் இறங்கி மேயும்
வயற்கரைகளில்
எழுந்து பறக்கிறது செங்கால் நாரை.

கண்களில் கவிதையை சேமிக்கிற பெண்கள்
தேவதைபோல் இறங்கி வருகிறார்கள்.

ஆயிரம் வானவில்லை
ஒன்றாக கட்டி கொண்டு வந்து
மலிவாக விற்கிறார்கள்.

இப்படி அழகான கனவுகள்
இருந்தன எமக்கு -------

கனவுகளுக்காவே இரவு வரை
காத்திருந்தன கண்கள்.

இன்று கனவுகளின் காட்சி
மாறிப்போனது.

புதைகுழிகளில் இருந்து பிள்ளைகள்
தலையில்லாமல் எழுந்து வருகிறார்கள்.

கையொன்று அறுந்த
தன்பிள்ளையை ஏந்தி
கதறுகிறாள் ஒரு தாய் .

கதற கதற அவளை
யாரோ இழுத்துச் செல்கிறார்கள்

அவள் கண்ணீர் நதியாய் நீள்கிறது
பின் நெருப்பாகி

வனமெங்கும் எரிகிறது
நானும் எரிகிறேன்.-----
      
            --------------------வேலணையூர்-தாஸ்

---------ஞானம்-டிசம்பர்-2013

திங்கள், 22 மார்ச், 2010

காதில் என்றும் ரீங்காரம்




சூரியப் புதல்வியே
கன்னிக்கவிதைகளின் அரங்கே
கனவுகளின் ஊர்வலமே
முகுந்தனின் முகவுரையும்
மணிவண்ணன் மணிக்குரலும்
லங்கேசின் லாவகமும்
தரணியின் தத்துவமும்
இன்னும் பெயரறியா சொல்லாளர்களால்
நீ அழகுபெறுகிறாய்
ராத்திரியின் நாயகியே
எம் அதிகாலை
கவிதைக்கனவே
இன்னிசையோடு இன் கவி தந்து
இதயம் நிறைந்தாய்
சில கவிதை சீறியெழும்
சில கவிதை சோகம் சொல்லும்
காதல் சிறகில் பறந்து வரும் சில கவிதை
கனவுகளை அள்ளி வரும்
காலை விடிந்தாலும் ரீங்காரம்
மனதினிலே ஓசையிடும்
ரீங்காரம் என்றும் ஒலிக்கட்டும்
தமிழ்க்கவிதை வாழட்டும்.

வேலணையுர் தாஸ்

சூரியன் ரீங்காரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதை